டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.147 கோடிக்கு மது விற்பனை நடந்து வருகிறது. இதற்கிடையே, 500 சில்லரை மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டதன் காரணமாக மதுபான விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக் எனப்படும் காகிதக் குடுவையில் மதுவை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
இதை எதிர்த்து டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை கோரி பிரதாப் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பாலித்தீன், அலுமினியம், காகித கலவையிலான டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அடைத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும். மறுசுழற்சி செய்தவற்கான மையங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.