இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார் துவக்க ஆட்டக்காரர் கில். ரோஹித் 13 ரங்களில் வெளியேற அடுத்த வந்த சூரியகுமார் யாதவ் வழக்கம்போல் டக் அவுட் ஆனார், இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். கோலி( 31), ராகுல்(9), ஹர்த்திக் பாண்ட்யா(1) ஜடேஜா (16), குல்தீப்(4), ஷமி(0) என்று அவுட் ஆகினர். இறுதி வரை ஆடிய அக்சர் படேல் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 11ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. அதிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார். எந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறினரோ அதே ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அணி பௌண்டரி மழையை பொழிந்தது. இந்த வெற்றி மூலம் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணி பயம் காட்டியுள்ளது என்றால் மிகையாகாது. இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதி ஆட்டம் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.