கடவுளின் அன்பையும், கருணையையும் பெற விரும்பும் மக்களை தடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கலாம் என்று போப் பிரான்சிஸ் அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வாட்டிகன் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடவுளின் அன்பையும், கருணையையும் தேடும் மக்கள் மத்தியில் திருமணத்தின் சடங்குடன், மற்ற சடங்கை குழப்பாமல் இருந்தால், சில சூழ்நிலைகளில் ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதங்களை வழங்கலாம். அதே சமயம் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வாழ்நாள் சடங்கு என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
எனவே திருமண நடைமுறைகளுடன் ஒரேபாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களை வழங்கக்கூடாது. அதற்காக அத்தகைய ஆசீர்வாதங்களுக்கான கோரிக்கைகளை முழுவதுமாக மறுக்கவும் கூடாது. ஒரு ஆசீர்வாதம் மக்களுக்கு கடவுள் மீது நம்பிக்கையை அதிகரிப்பதற்கான வழியை வழங்குகிறது. எனவே இது நாம் வாழும் உலகில் சிறிய விஷயமல்ல. இது பரிசுத்த ஆவியின் விதை, அது வளர்க்கப்பட வேண்டும், தடுக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.