”இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” என்ற திட்டத்தின் காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளில் சிக்கும் நபர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் சிக்குவோருக்கு, உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், ரூ.1 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அந்த தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், சிகிச்சை பெற்று பயனடைந்த பயனாளர்களுக்கு பழக்கூடை, சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விருது, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசுகையில், கடந்த 2021 டிசம்பர் 18ஆம் தேதி துவங்கப்பட்ட திட்டத்தில், தமிழகத்தில் அதிக விபத்துகள் நடக்கும், 500 இடங்களைக் கண்டறிந்து, அதன் அருகில் உள்ள மருத்துவமனைகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விபத்து நேர்ந்து முதல் 48 மணி நேரத்தில், மருத்துவமனையில் சேர்ப்போருக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டினரும் பயனடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 3.20 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் 248 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகளில் செயல்பாட்டில் உள்ளது” என்று தெரிவித்தார்.