ஹரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகளில் சுமார் 500 பேர் பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் பிரதமர் மோடி, ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஆளுநர் தத்தாத்ரேயாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், தனது அறைக்கு மாணவியரை அழைத்து பேசும் போது, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், சீண்டல்களையும் செய்து வருகிறார். பல நாட்களாக இதுபோன்ற செயல்களை செய்து வரும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் ஏஎஸ்பி தீப்தி கார்க் கூறுகையில், ”பேராசிரியருக்கு எதிராக தற்போது மாணவிகள் 4-வது முறையாக கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு முன் நடத்தப்பட்ட விசாரணையில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.