சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme- SCSS). இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக இத்திட்டம் கருதப்படுகிறது. இது ஒரு வழக்கமான வருமானத்தை வழங்குவதுடன் ஓய்வு காலத்தில் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை (SCSS) திறப்பது எப்படி? SCSS கணக்கை ஒரு மூத்த குடிமகன் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் திறக்கலாம். கணக்கைத் திறக்க, குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 1000 ஆகும்.. அதிகபட்ச வைப்புத் தொகையாக ரூ. 30 லட்சம் வரை செலுத்தலாம்.. அதிகபட்சமாக ரூ. 30 லட்சத்திற்கு மிகாமல் ஒரே ஒரு டெபாசிட் மட்டுமே கணக்கில் இருக்க முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை யார் தொடங்கலாம்? 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய தனிநபர் இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம்.. அதே போல் 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 60 வயதுக்குக் குறைவான நபர்கள் சிறப்பு ஓய்வூதியம், VRS அல்லது சிறப்பு VRS ஆகியவற்றின் கீழ் ஓய்வு பெற்றவர் ஒரு கணக்கைத் திறக்கலாம். ஒரு நபர் தனித்தனியாகவோ அல்லது மனைவியுடன் கூட்டாகவோ கணக்கைத் திறக்கலாம்.
வட்டி விகிதம் : மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 8.2% ஆகும். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் முடிந்த பிறகு கணக்கை மூடலாம். டெபாசிட் செய்பவர் கணக்கை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்கூட்டியே மூடுவது அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டத்தின் 80-C க்கு விலக்கு பெறலாம்.