புதுக்கோட்டை மாவட்டம் அருகே விஜயபுரம் பகுதியில் வசித்து வருபவர் கண்ணையா. இவரது மகன் மாதேஸ்வரன், புதுக்கோட்டையில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாதேஸ்வரன் பள்ளிக்கு அதிக தலைமுடி மற்றும் தாடி வளர்த்து சென்றுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மாதேஸ்வரனை தொடர்ந்து முடியை வெட்டுமாறு கண்டித்துள்ளனர். ஆனால், எதையும் கண்டுக்கொல்லாத மாதேஸ்வரன் வழக்கம் போல் அதிக முடி மற்றும் தாடியுடன் தேர்வுக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த பள்ளி தலைமை ஆசிரியர், தலை முடியையும், தாடியையும் வெட்டிவிட்டு தேர்வு எழுது என்று கூறி பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால், மாதேஸ்வரனின் குடும்பத்தினர் பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது ஆசிரியர்கள் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால், மாணவனின் பெற்றோர் மாணவனை தேடிய போது பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு மரத்தில் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளான். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவனின் பெற்றோர், மாணவனின் தற்கொலைக்கு காரணமான பள்ளியின் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.