தேனி மாவட்டம் போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு ஜெயா என்ற மனைவியும், முத்து, பாலாஜி என இரு மகன்களும் உள்ளனர். ஜெயா, ஏலக்காய் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களின் இளைய மகனான பாலாஜி 9ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதனால் சிறுவன் வீட்டில் இருந்துள்ளான். தினமும் சிறுவன், அப்பகுதியில் உள்ள போடி ரயில் நிலையத்தை சுற்றி விளையாடுவது வழக்கம். இந்நிலையில், பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த போடி ரயில் சேவை தற்போது தான் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, வழக்கம் போல் விளையாட சென்ற சிறுவன், ரயில் பயணிகள் அவர்களின் குழந்தைகளுடன் ரயிலில் சென்று வருவதை பார்த்துள்ளான். இதனால் சிறுவனுக்கு தானும் ரயிலில் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதையடுத்து, தனது ஆசையை சிறுவன் அவனது பெற்றோரிடம் கூறியுள்ளான். ஆனால் சிறுவனின் பெற்றோர் அவனது ஆசையை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் தினமும் ரயில் நிலையத்துக்கு விளையாட சென்ற சிறுவன், தானும் தனது பெற்றோருடன் பயணிக்க வேண்டும் என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
பெற்றோர் இருவரும் தினமும் வேலைக்கு செல்வதால், சிறுவனின் ஆசையை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், ரயில் மீது தனக்கு இருந்த ஏக்கத்தை யாரும் உரிந்து கொள்ளாததால், பெற்றோர் பணிக்கு சென்றதும், சிறுவன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளான். அதில், “அண்ணனையாவது நன்றாகப் பார்த்து கொள்ளுங்கள்” என கூறியுள்ளான். பின்னர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வேலையை முடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்த பெற்றோர், மகனின் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தன்னால் ரயிலில் பயணம் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, பாலாஜியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.