கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்து கீழே அமர்ந்திருந்த மாணவர்கள் மீது விழுந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னேசலம் அருகே வி.மாமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இதில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய கட்டிட வசதி இல்லை. சில இடங்களில் சிதிலமடைந்துள்ளன. இந்நிலையில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பள்ளி மாணவர்கள் மீது சிமெண்ட் ஓடுகள் விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் நயினார் பாளையம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதில் பரத் என்ற மாணவர் பலத்த காயம் அடைந்தான். அவனது தலையில் 11 தையல் போடப்பட்டுள்ளது. மற்ற 3 பேரும் லோசான காயத்துடன் முதலுதவி பெற்றனர். பரத்துக்கு மேற்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அளித்ததும் வருவாய் வட்டாட்சியர் இந்திரா மாணவர் பரத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து தற்போது கள்ளக்குறிச்சிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.