ஈரோடு மாவட்டம் சித்தோட்டை அடுத்த செங்குந்தபுரம் வாய்க்கால்மேட்டை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெல்டிங் வேலைக்கும், ஐஸ் விற்கவும் சென்று வந்த கோபால், குடும்பத்தை கவனிக்காமல் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால், மனைவி மணிமேகலா மிக்சர் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே, போதையில் வீட்டிற்கு வரும் கோபால், தனது மனைவியை அடித்து உதைப்பதை வாடிக்கை வைத்திருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு செல்போனில், மனைவி ஒரு ஆணுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் விசாரித்தபோது, அது மனைவி மணிமேகலாவின் பள்ளி பருவ நண்பர் என்பது தெரியவந்தது.
பள்ளி கால காதலனுடன் போட்டோ எடுக்கும் அளவுக்கு என்ன உறவு வேண்டி கிடக்குது..? என்று கேட்டு மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார் கோபால். இதனால் மனைவியுடன் கோபித்துக் கொண்டு கோபால் வெளியூர் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து, மீண்டும் ஊர் திரும்பிய அவர், சென்னிமலை சாலையில் வீடு எடுத்து தங்கியிருந்தார். இதற்கிடையே, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி போலீசிலும் புகாரளித்திருக்கிறார்.
ஆனால், மனைவி மறுத்துவிட்டதால், நீதிமன்றத்தை அணுகி பிரச்சனைக்கு தீர்த்துக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், தன்னை பிரிந்து வாழும் மனைவி மணிமேகலா, அவளது பள்ளி கால காதலனான கறிக்கடை மோகன்ராஜூடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருவதாக கோபாலுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவத்தன்று தனது குழந்தைகளை வீட்டிற்கு சென்று பார்த்த கோபால், மனைவி வேலை பார்க்கும் கம்பெனிக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ஆத்திரம் அடைந்த கோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலையில் கழுத்தில் 3 முறை குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து, கோபால், காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.