நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்துள்ள எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய இரண்டாவது மகள் விசித்ரா (23). பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் விசித்ராவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி விசித்ராவை திடீரென காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விசித்ராவை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு விசித்ரா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜெயசீலன் என்பவரும், விசித்ராவும் எடக்காடு பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. விசித்ரா கல்லூரிக்கு சென்ற போது, இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் ஜெயசீலன் நடவடிக்கை சரியில்லாததால் அவரை கழற்றி விட்டுள்ளார் விசித்ரா. பின்னர், விசித்ராவுக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
இந்த தகவல் அறிந்த ஜெயசீலன் ஆத்திரத்தில் நேரில் வந்து தனியாக பேச வேண்டும் கூறி விசித்ராவை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜெசீலன் கயிற்றால் விசித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கில் ஜெயசீலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.