பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இலவச பேருந்து வசதியும் அமைத்து கொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இந்த இலவச பஸ் வசதி அமைத்து தரப்பட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்களையும் வழங்கி வருகிறது.
இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அந்தவகையில், இந்த வருடமும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி மும்முரமாகி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த வருடம் போல் இல்லாமல், இந்த வருடம் மாணவர்களின் பஸ் பாஸ், கம்ப்யூட்டரைஸ்டு அதாவது கணினி முறையில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், மாணவர்களின் விவரங்கள், பஸ் பாஸ் விவரங்கள் அனைத்தும் கணினி மூலமாகவே பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விறுவிறுப்பாக மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் விவரங்களை உடனடியாக சேகரிக்குமாறு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களின் விவரங்களை TNSED செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிகள்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் பஸ் பாஸ் தயாரிக்கப்பட்டு வருவதால், மாணவர்களின் பெயர், பள்ளி, புகைப்படம், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு செல்கிறார் என்ற விவரம் ஆகியவை அதில் கணிணி முறையில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால், இந்த விவரங்கள் கேட்கப்படுகிறது. இவைகளை மாணவர்களிடமிருந்து பெற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.