கடந்த 3 நாட்களில் உ.பி.யில் 54 பேரும், பீகாரில் 44 பேரும் வெயில் தாக்கம் காரணமாக பலியாகியுள்ளனர்.
கோடை காலம் முடிய உள்ள நிலையிலும் பல இடங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. இந்த வெயிலினால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பீகாரில் வெப்ப சூழல் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் பல்லியா மாவட்ட மருத்துவமனையில் மூச்சுத்திணறல், காய்ச்சல் மற்றும் பிற உடல் நலக் கோளாறுகள் காரணமாக 400 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலானவர்கள் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள். இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, பல்லியா மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.7 டிகிரி அதிகமாகி 42 செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இதற்கிடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, மக்களை பாதுகாப்பாக இருக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.