கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் நுங்குகடல்பாசி செய்வது எப்படி என்று இதில் பார்ப்போம் .
கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. சில நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வியர்வை கொட்டுகிறது. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கும் நோய்களின் பயமுறுத்தல்.
கோடைக்கால நோய்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்ப்படுத்தும் முக்கியமான பிரச்னை வியர்க்குரு. இதனை, நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம். அந்தவகையில், உடலுக்கு குளிர்ச்சியை தரும் நுங்குகடல்பாசி செய்வது எப்படி என்று பார்ப்போம் .
தேவையான பொருட்கள்: நுங்கு- 6-8, கடற்பாசி-10 கிராம், தண்ணீர்-2 கப், பால்-1 லிட்டர், சீனி- தேவைக்கு ஏற்ப, எஸன்ஸ்- சிறிதளவு. செய்முறை: கடற்பாசியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் கடற்பாசி நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பாலை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். நன்கு கடற்பாசி கரைந்ததும் சீனியை அத்துடன் சேர்க்க வேண்டும் .நுங்குடன் பாதம்,பிஸ்தா,அல்லது ரோஸ் எஸன்ஸ் கலந்து வைக்கவும். கடற்பாசி கொஞ்சம் ஆறியதும் நறுக்கிய நுங்கை கடற்பாசியுடன் சேர்த்து கலந்து விட்டு சிறு சிறு கிண்ணத்தில் ஊற்றி 3-4 மணிநேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து பரிமாறினால் சுவையான நுங்குகடல்பாசி தயார் .