கோடை விடுமுறை என்றதுமே முதலில் செல்லலாம் என யோசிக்கும் இடம் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு தான். அதிலும், கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது. ஆனால், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் கொடைக்கானல் காட்டின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவத் தொடங்கியுள்ளது. இந்த தீயால் மூலிகை செடிகள், அரியவகை மரங்கள் எரிந்து சாம்பலாகியது. மேலும், வனவிலங்குகளும் வெவ்வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இப்படி இருக்கையில் தற்போது இந்த காட்டு தீ டால்பின் நோஸ் பகுதியில் பரவியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
வழிமாறி போகக்கூடிய தன்மை கொண்ட கொடைக்கானல் காட்டில் இப்போது புகை நிரம்பி இருப்பதால் பயணிகள் இவ்வழியாக செல்லும்போது வழிமாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், டால்பின் நோஸ் பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதால் பயணிகள் தீவிபத்தில் மாட்டி கொள்ளாமல் இருக்க இந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.