தெலங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியில் உள்ள கல்லாபூர் கிராமத்தில் இளம்பெண் ஸ்ரீஷா (19), தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர், மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவரது தாயார் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஸ்ரீஷா உடனிருந்து தனது தாயாரை கவனித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, ஸ்ரீஷாவை தொடர்பு கொண்ட அவரது தந்தை ஜங்கையா, உடனே ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டு வேலைகளை பார்த்து சமைத்து தருமாறு கூறியுள்ளார். அதன்பேரில் வீட்டுக்கு சென்ற ஸ்ரீஷா, சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்யாமல் செல்போனில் மூழ்கி கிடந்துள்ளார். இதனை கவனித்த தந்தை ஜங்கையா மகளை கண்டித்துள்ளார். இருப்பினும், செல்போனை பயன்படுத்தியதால், ஆத்திரமடைந்த அவர் தனது மகள் ஸ்ரீஷாவை அடித்துள்ளார். இதனால் ஸ்ரீஷா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், நள்ளிரவு கடந்தும் வீடு திரும்பவில்லை. இதனால் மகளை தேடிய ஜங்கையா எங்கும் கிடைக்கவில்லை என்பதால் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் ஜூன் 10ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கிடையே, போலீசார் ஸ்ரீஷாவை தேடி வந்த நிலையில், அதற்கு மறுநாள் ஊரில் இருந்து சமார் ஒரு கி.மீ., தொலைவில் உள்ள ஒரு குளத்தில் அப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது ஸ்ரீஷாவின் கண்கள் ஸ்குரூ டிரைவரால் குத்தப்பட்டு, கழுத்து பிளேடால் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக ஸ்ரீஷாவின் தந்தை, அவரது அக்காவின் கணவர் அணில் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.