செக்ஸ் டார்ச்சர் புகாரால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ மற்றும் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் எம்பி ஆகியோர் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஜோதிடம், கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட ரேவண்ணா பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக வீட்டில் ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை செய்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா மற்றும் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் பாலியல் புகாரில் சிக்கி இருக்கின்றனர். இதில், ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக இருக்கிறார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் எம்பியாக உள்ளார். தற்போதைய மக்களவை தேர்தலிலும் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளாராக பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார். அப்போது தான் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றார். சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு எஸ்ஐடி சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இதற்கிடையே தான், பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் முன்னாள் பணிப்பெண் போலீசில் பாலியல் புகாரளித்தார். இதையடுத்து, அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி எஸ்ஐடி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ஆகியோர் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போதைய பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக பிரஜ்வல்லின் தந்தை ரேவண்ணா தனது வீட்டில் அர்ச்சகர்களை வைத்து ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை உள்ளிட்ட சடங்குகளை செய்துள்ளார். இந்த பூஜை ஹாசன் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி தற்போது பரவி வருகின்றன. ரேவண்ணாவை பொறுத்தவரை கடவுள், ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அவரது நெற்றியில் எப்போதும் திலகம் இருக்கும். கையில் கயிறு கட்டியிருப்பார். மேலும், கழுத்தில் ருத்ராட்சம் உள்பட ஏதாவது ஒரு மாலை அணிந்திருப்பார். அதோடு விரல்களில் அதிர்ஷ்ட கற்கள் தொடர்பான மோதிரம் அணிந்திருப்பார். இவை அனைத்தும் இல்லாமல் ரேவண்ணாவை பொதுவெளியில் பார்க்க முடியாது.
இதற்கு முன்பு கூட அவர் தனது கையில் எலுமிச்சை பழம் வைத்து கொண்டு பொதுவெளியில் வலம் வந்தார். அதுபற்றி கேட்டதற்கு எலுமிச்சையை கையில் வைத்து கொண்டால் தீயவை நெருங்காது என கூறியிருந்தார். அதேபோல் சில நாட்கள் செருப்பு, காலணி அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்தார். இது எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 2018 ல் ரேவண்ணா செய்த சம்பவம் பெரும் பேசுபொருளானது. அதாவது கர்நாடகாவில் கடந்த 2018இல் காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது ரேவண்ணாவின் தம்பி குமாரசாமி முதல்வராக இருந்தார். ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்த சமயத்தில் பெங்களூருவில் உள்ள வீட்டில் வசித்தால் நல்லது நடக்காது என ஜோதிடர் கூறியதால், அவர் தினமும் 350 கிலோமீட்டர் தூரம் (பெங்களூர் – ஹாசன் இடையேயான தொலைவு) காரில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : சிறிய முதலீடு..!! 3 ஆண்டுகளில் ரூ.6.20 லட்சம்..!! வட்டி எவ்வளவு தெரியுமா..?