நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் கயிலை ராஜனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆயக்குடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த தேர்தலில் பாஜக வந்துவிடும் என்று திமுக கூறியதைக் கேட்டு பயந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் நம் தமிழருக்கு வாக்களிக்காமல் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், திமுக இப்போது பாஜக வந்துவிட்டது, பாஜக வந்துவிட்டது என்று கூறுகின்றனர். நாம் தமிழருக்கு வாக்களித்து இருந்தால், தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்குமா? வந்திருக்குமா? மக்கள் மறுபடியும் திமுகவுக்கு வாக்களித்தால் வளர்ந்துவிட்டது பாஜக என்று கூறுவார்கள்.
பாஜகவை தமிழ்நாட்டில் கொண்டுவந்தது திமுகவும் மறைந்த முதல்வர் கருணாநிதியும்தான். பாஜகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். வாஜ்பாயை இந்திய நாட்டின் பிரதமராக்கி, இந்த நாடு முழுவதும் வலிமையான அதிகாரத்தை வேர் பரப்ப வைத்து அவர்களை வலிமையான அரசாக மாற்றியது திமுகதான். இதுதான் உண்மை. எனவே, மக்கள் மறுபடியும் அந்த வரலாற்று பெருந்தவற்றை செய்யக்கூடாது. பாஜக திமுகவை ஏதாவது செய்திருக்கிறதா?. ஆனால், நாம் தமிழர் கட்சியின் சின்னத்தைப் பறிக்கின்றனர். என்ஐஏ சோதனை அனுப்புகின்றனர். காரணம், என்னைக் கண்டு பாஜக பயப்படுகிறது.
நாம் தமிழர் வீரன், திமுக கோழை. அதனால் அவர்களைக் கண்டு பயப்படுவது இல்லை. பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் சொல்கின்றனர், திமுக ஜக்கம்மா சொல்கிறார்கள் என்று குடுகுடுப்பை அடிக்கின்றனர். திமுக கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை மதிப்பது இல்லை. 22 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. அதில், எத்தனை கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. நவாஸ் கனிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கில் சீட் கொடுத்து ஒதுக்கிவிடுவது. காரணம் திமுக அங்கு நின்றால் தோற்றுப்போகும் என்பதால், அந்த தொகுதியை இப்படி கழித்துக்கட்டி விடுவது.
ஆனால், நாம் தமிழர் கட்சியில் கடந்தமுறை இஸ்லாமியர்களுக்கு 5 இடங்களைக் கொடுத்தோம். இம்முறை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு தலா இரண்டு இடங்கள் கொடுத்திருக்கிறோம். அரசியலில் சிறுபிள்ளைகளான நாங்களே சமூகநீதி அடிப்படையில் இப்படி பிரித்துக் கொடுத்திருக்கும்போது, இவ்வளவு பெரிய கட்சி திமுக ஏன் அதை செய்யவில்லை? ” என சீமான் விளாசினார்.