இங்கிலாந்தில் இருக்கும் ஒரு தமிழீழ கைம்பெண்ணுடன் சீமானுக்கு நெருங்கிய பழக்கம் இருந்ததாக பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கார்த்திக் மனோகரன் கூறுகையில், ”தமிழீழ கைம்பெண்ணுடன் சீமானுக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. சீமான், தமிழீழ கைம்பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றுக் கூறி பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.
சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால், அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் சந்தித்து பேசவில்லை. ஒரு 10 நிமிடத்திற்குள் தான் இந்த சந்திப்பு நடந்தது. அவர் பிரபாகரனுடன் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சித்தப்பாவும் (பிரபாகரன்) யார் கேட்டாலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். ஆனால், பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும்.
குடும்ப உறவினர்களாகவே இருந்தாலும் இதுதான் நடக்கும். அதேபோல், அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் இருந்தது. அதனால் தான், சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாம். தற்போது, அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
சீமான், எங்களுடன் தொடர்பில் கூட இல்லை. ஆனால், ஊடகங்களில் எங்கள் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் பரப்பி வருகிறார். சீமான் அங்கு விருதுக்காக அழைத்துச் செல்லப்படவில்லை. அவரின் ஆவணப்படம், வெளியுலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஊடகக் குழுவினருடன் வந்தவர். அவ்வளவு தான்” என்று பேசியுள்ளார்.