தொழில்நுட்பம் வளர வளர நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பெண்களின் செல்போன் நம்பர் விற்பனைக்கு என்று புது மோசடி ஒன்று ஆன்லைனில் அரங்கேறி வருகிறது. பிரபல நடிகைகளின் முகத்தை மார்பிங் செய்வது, லிங்க்குகளை அனுப்ப சொல்லி பணத்தை அபேஸ் செய்வது என மோசடிகள் நடக்கின்றன. இதில் பெரும்பாலும் சிக்கிவிடுவது பெண்களாகவே உள்ளனர். அந்தவகையில், பெண்களை பாதிக்கும் நூதன முறை சைபர் கிரைம் ஒன்று தற்போது நடந்துள்ளது. பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் பணமோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் குவிந்தபடி உள்ளது.
அதாவது, சம்பந்தப்பட்ட வெப்சைட்களில் நுழைந்ததுமே, ஒரு மெசேஜ் வருகிறதாம். அதில், பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது. வயது வாரியாக பல பெண்களின் செல்போன் நம்பர்கள் உள்ளன என்று மர்ம நபர்கள் மெசேஜ்கள் அனுப்புகிறார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த கிரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில் ரூ.200 முதல் ரூ.500 வரை செல்போன் நம்பர்கள் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. வயதிற்கு ஏற்றார்போல், பெண்களின் புகைப்படங்களுடன் செல்போன் நம்பர் விலை வைத்து விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நம்பர், விற்பனை செய்யப்பட்ட பிறகு சில மணி நேரம் பேசுகிறார்களாம். அடுத்த சிறிது நேரத்திலேயே ஸ்விட்ச் ஆப் ஆகி விடுகிறதாம். மீண்டும் சோஷியல் மீடியா மூலம் பெண்களின் எண்களை வாங்குவதற்கு ஆண்களை தேட துவங்குகிறதாம் மர்ம கும்பல். இந்த மோசடியில் சுய தொழில் மேற்கொள்ளும் பல பெண்கள் பாதிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. உதாரணமாக, டெய்லர் கடை, பியூட்டி பார்லர் போன்றவற்றை பெண்கள் மட்டுமே நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களது கடைகளுக்கு விளம்பரம் செய்ய நேரிடும்போது, அதில் தங்கள் கடையின் போன் நம்பரையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இப்படி இந்த விளம்பரத்திற்காக எழுதப்படும் செல்போன் நம்பரையும், அந்த மர்ம கும்பல் திருடி ஆன்லைனில் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த பெண்களிடம் வாடிக்கையாளர் போல அறிமுகமாகி, நட்பாக்கி கொண்டு, பிறகு அவர்களையும் தங்கள் ஆசை வலையில் விழ வைத்து, விபச்சாரத்தில் தள்ளிவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இதுபோன்று மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.