கோயம்புத்தூர் மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரத்தினபுரியை ஒட்டி சங்கனூர் ரோடு, கண்ணப்பன்நகர் அருகே வந்தபோது அங்கு ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தார். அந்த இருசக்கர வாகனத்தில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த காவல்தூறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதில் சந்தேகம் வலுத்தது. இதனை தொடர்ந்து அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதற்குள் சாக்லெட் பாக்கெட்டுகள் இருந்தது. அதனை பரிசோதனை செய்ததில் அவை அனைத்தும் கஞ்சா சாக்லெட் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர் கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் பாலாஜி (56) என்பதும் கோவையில் உள்ள காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்தூறையினர், அவரிடம் இருந்து சுமார் 20 கிலோ கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கஞ்சா சாக்லெட்டை கடத்தி வந்து அவற்றை கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் ஸ்டைல் சுரேஷ் என்பவர் கும்பல் தலைவனாக செயல்பட்டு வருவதும், அவர் அந்த பகுதி முழுவதும் விற்பனைக்காக கஞ்சா சாக்லெட்டை சப்ளை செய்துவருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை முதல் குற்றவாளியாக சேர்த்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைவனான ஸ்டைல் சுரேஷ் உள்ளிட்ட அவரது நெட்வொர்க்கில் உள்ள 16 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.