தமிழ்நாட்டில் இனி ஓட்டுநர் உரிமங்கள் விரைவு தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துடன், தமிழ்நாடு அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளது. இது கடந்த பிப். 28 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 162 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு தபால் மூலம் விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அப்படி வரும் போது, வீட்டில் ஆள் இல்லாமல் இருந்தால் விரைவு தபால் சம்மந்தப்பட்ட அஞ்சலகத்தில் 7 நாட்கள் வரை இருக்கும். விண்ணப்பதாரர் அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலலாம். அப்படியும் பெறாமல் இருந்தால் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அது மீண்டும் திருப்பி அனுப்பப்படும். மேலும், தபால் வருவதற்கு முன் சம்மந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இதுவரை 4.02 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் பெறப்பட்டு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து எதாவது புகார் இருந்தால் www.indiapost.gov.in இணையதளம் Twitter@indiapostoffice என்ற ட்விட்டர் தளத்திலும், 18002666868 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ‘Boat’ நிறுவன யூசரா நீங்கள்..? உங்கள் ரகசிய தகவல்கள் லீக்..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!