மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து சேமிப்பு பத்திரங்களாக வழங்கப்படுகிறது. இது 18 வயது நிறைவடைந்த 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த குழந்தைகளுக்கு மட்டுமே வட்டியுடன் கூடிய முதிர்வு தொகையுடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட சேமிப்பு பத்திரத்துடன், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டா ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும், 0431- 2413796 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.