இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தார். அவர் அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதற்கிடையே, ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த தகவல் திருவண்ணாமலை நகர பகுதியில் பரவியது. கடந்த ஜூலை 1ஆம் தேதியுடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை நகர பகுதியில் நிறைவடைவதையொட்டி ரஜினி கோயிலுக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலைக்கு சென்ற ரஜினிகாந்தை அமைச்சர் எவ.வேலு சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திரைத்துறை, அரசியல் சூழல், பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த அமைச்சர் எவ.வேலு, ரஜினியை போன்று பேருந்து நடத்துநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.