தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன் என்பவர் தனது மனைவி ஜமுனாவை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். அங்கு மகப்பேறு மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஜமுனாவுக்கு செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர். இதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால், பிரசவத்திற்கு பின் ஜமுனாவுக்கு அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் ஜமுனா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதுதொடர்பாக ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், “உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இடையே 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸை சேவை இருக்க சுகாதாரத் துறை துணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மூத்த மருத்துவர்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் திடீரென ஆய்வும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதலை பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென்றும் உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.