கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி தியாகராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபானங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் தியாகராஜனுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான், நவ்லாக் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (வயது 45) என்பவர், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்தில் தியாகராஜன் மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பண மோசடி, கொலை மிரட்டல் என தியாகராஜன் மீது புகார்களை அடுக்கியிருந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-விலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான், கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி தியாகராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக விஜயகுமார் என்பவர் அப்பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். மேலும், வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.