பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனுதாரர் விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பண மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல் ஏ பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளார் எனவே வழக்கின் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனுதாரர் விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்க கூடாது என அமலாக்கத்துறை இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது. 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது என செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது.
பதில் மனுவை நாங்கள் இன்னமும் படித்து பார்க்கவில்லை எனவே வழக்கின் விசாரணையை மே 6-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மே 18-ம் தேதியிலிருந்து ஜூலை 7-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை கோடை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மே 6-ம் தேதி நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி காத்திருக்க நேரிடும்.