டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற அவர், இன்று மீண்டும் சென்னை திரும்பினார். இந்த பயணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அரசாங்க நிர்வாக ரீதியாக இல்லாமல், அரசியல் பயணமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், அன்றைய நாளின் இரவே, திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுடன் டெல்லி சென்று வந்தார் துரைமுருகன். தற்போது அதே பாணியில் தான், 1,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு வெளியான நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, இரவோடு இரவாக டெல்லி சென்று வந்துள்ளார்.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையின் புகாரை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தற்போது அவரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.