அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 7ஆம் தேதி முதல் 5 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், காவல் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சுமார் 3,000 பக்க ஆதார ஆவணங்களுடன் 120 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அனைத்து ஆவணங்களையும் இரும்பு பெட்டியில் வைத்து, அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.