குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது என்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை வாதங்களை முன்வைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது, “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்?
வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது . செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல்நிலைப்படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்கவே முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர் கொள்வார். 3,000 கோடி முதல் 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டுள்ளதால் கலைக்க முடியாது.” என வாதங்களை முன்வைத்துள்ளார். இதற்கு பதில் வாதம் வைத்த அமலாக்கத்துறை, “வருமானவரி கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. முழுமையான விசாரணையில்தான் அது தெரியவரும். வேலை வேண்டும் என பணம் கொடுப்பவர்கள் வங்கி வாயிலாக பணம் கொடுக்கமாட்டார்கள்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராகத்தான் உள்ளார். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். எனவே, அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் கிடையாது என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 20ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.