தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத்துறை வழங்கப்படலாம் என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது.
வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அண்மையில் சைவம், வைணவம் குறித்தும், பெண்களை பற்றியும் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார். அவரது பேச்சுக்கள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன. பொன்முடியின் பேச்சையடுத்து அவரது திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவரை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
எனவே, அமைச்சரவை மாற்றப்படும் பட்சத்தில் வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடியின் பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தொடர்ந்து அமைச்சராக செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளது. ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதனால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய செந்தில் பாலாஜியே முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, அவர் வகித்து வரும் மின்சாரத்துறை, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மேலும் சில மூத்த அமைச்சர்களும் மாற்றப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
Read More : ‘விண்ணப்பித்த 3 நாட்களில் புதிய மின்சார இணைப்பு’..!! அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன செம குட் நியூஸ்..!!