காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நாளை காலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இருதய நோய் சிறப்பு நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு நாளை (ஜூன் 21) பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியின் இதயத்திற்குச் செல்லக்கூடிய 3 ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 முக்கியமான அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு பரிந்துரைத்தது.
காவேரி மருத்துவனையில் செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட உயிர்காக்கும் சிகிச்சையின்போது ரத்த ஓட்ட அடைப்பை சரி செய்ய அளிக்கப்பட்ட மருந்துகள் நிறுத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர். அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு பெற்றார். அறுவை சிகிச்சைக்கு செந்தில் பாலாஜியின் உடல்நிலை தயாராகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.