இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் தமிழக முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக ஆளுநர், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
அதேபோல், செந்தில்பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறையானது வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீது குற்றவியல் நடவடிக்கை இருப்பதாலும், நீதிமன்றக் காவலில் இருப்பதாலும், அமைச்சரவையில் அவர் தொடர்ந்து நீடிப்பதை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை.
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது என ஆளுநர் தெரிவித்திருந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.