கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் பரவுகிறது. சிருங்கேரியில் ஒருவர், கொப்பாவில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிருங்கேரியின், பேகனகொட்டா கிராமத்தைச் சேர்ந்த 79 முதியவர், நேற்று முன் தினம் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது கிராமத்துக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்துள்ளனர். சிருங்கேரி, கொப்பா உட்பட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு, சுகாதாரத்துறை ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் வீடு வீடாக சென்று மருந்து கொடுக்கின்றனர்.
வனப்பகுதியில் குரங்கு காய்ச்சல் பரவாமல், பூச்சிகொல்லி மருந்து தெளித்துள்ளனர். கிராமத்தில் இறந்த குரங்கின் ரத்த மாதிரியை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். மூவருக்கு குரங்கு காய்ச்சல் பரவி, ஒருவர் இறந்ததால், சிக்கமகளூரு மாவட்டத்தில் சுகாதாரத்துறை, ‘ஹை அலர்ட் அறிவித்துள்ளது.
இதுவரை கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். குரங்கு காய்ச்சலால் 18 வயது சிறுமி, 79 வயது முதியவர் உயிரிழந்துள்ள நிலையில் 49 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.