80களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பானுப்ரியா. ஆனால் அவருக்கு அடுத்தடுத்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தெலுங்கில் ஸ்வர்ணகமலம், ரிஷ்யஸ்ரிங்கன், சீதாரா மற்றும் சத்ரபதி உள்ளிட்ட சில ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.. தனது அசத்தலான நடிப்பு மற்றும் நடனம் ரசிகர்களை கவர்ந்தார்.
திறமையான குச்சிபுடி நடனக் கலைஞரான பானுப்ரியா தனது நடிப்பு திறமைக்காக ஆந்திர அரசின் நந்தி விருதுகள், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
55 வயதாகும் நடிகை பானுப்ரியா இப்போது சென்னையில் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். எனினும் தனது திரை வாழ்க்கையில் இருந்து சிறிது காலம் அவர் ஓய்வில் இருந்தார்.
சமீபத்தில் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த பானுப்ரியா தனது மருத்துவ நிலை குறித்தும், திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது ஏன் என்பது மனம் திறந்து பேசினார். தனது கணவர் இறந்ததிலிருந்து நினைவாற்றல் இழப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக நடிகை தெரிவித்தார்.
1998 இல் ஆதர்ஷ் கௌஷலை மணந்த பானுப்ரியா, 2005 முதல் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். 2018 இல் ஆதர்ஷ் இறந்த பிறகு, தனது மெமரி லாஸ் பிரச்சனை ஏற்பட்டதாகவும், விஷயங்களை நினைவில் வைத்திருப்பது கடினமாக இருப்பதாகவும் கூறினார். பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் அது மோசமாகிவிட்டதாகவும் நடிகை பகிர்ந்து கொண்டார்.
நினைவாற்றல் இழப்பு காரணமாக வேலையில் தான் சந்தித்த தடைகளைப் பற்றி பேசிய பானுப்ரியா, “நான் செய்ய வேண்டிய விஷயங்களை என்னால் மனப்பாடம் செய்ய முடியவில்லை; படப்பிடிப்பு தொடங்கிய பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் நான் என் வரிகளை மறந்துவிட்டேன். இது சுமார் இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
தனது முன்னாள் கணவர் ஆதர்ஷுடனான தனது பிரிந்த உறவைப் பற்றி பானுரியா மேலும் விரிவாகக் கூறினார். தாங்கள் இருவரும் விவாகரத்து பெறவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும் “என் கணவரும் நானும் விவாகரத்து பெறவில்லை. இதைப் பற்றி பல வதந்திகள் உள்ளன, ஆனால் அவர் இப்போது உயிரோடு இல்லாததால் நான் அவற்றைப் பற்றி பேச விரும்பவில்லை,” என்று நடிகை கூறினார்.
ஊடக வெளிச்சத்தில் இருந்து விலக இருக்க விரும்புவதாகவும், தனது வீட்டில் இருக்கவும், புத்தகங்களைப் படிக்கவும், இசையைக் கேட்கவும், தனது அன்றாட வேலைகளைச் செய்யவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.. பானுப்ரியாவுக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். அவரது மகள் தற்போது லண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.