சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் கைதான திவ்யா, கார்த்திக் மற்றும் சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (30). தஞ்சையை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் திவ்யா (36). இவருடன் ரீல்ஸ் வீடியோ போடுவதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு கடந்த நவம்பர் மாதம் வந்துள்ளார். அங்கு திவ்யா, இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கார்த்திக், கடந்த வாரம் விருதுநகர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தார்.
இதற்கிடையே, கடலூரை சேர்ந்த யூடியூப் பிரபலம் சித்ரா (48) சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், யூடியூபர் திவ்யா, குழந்தைகளை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரளித்திருந்தார். இதுதொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு யூடியூபர் திவ்யா, தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திவ்யா, கார்த்திக், சித்ரா, ஆனந்தராமன் ஆகிய 4 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், திவ்யா, கார்த்தி மற்றும் சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் எஸ்பி கண்ணன் பரிந்துரைத்த நிலையில், மூவரையும் விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் குண்டச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.