பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தும் முறைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுபடுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தனர். எனவே, இரு விரல் சோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என மத்திய, மாநில சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதனை உறுதி செய்ய அனைத்து மாநில காவல்துறை தலைவர்களும் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான பயிலரங்குகளை நடத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இருவிரல் பரிசோதனை என்பது பெண்களின் பாலுறுப்புக்குள் இருவிரல்களை விட்டு கன்னித்திரை கிழியாமல் சரியாக இருக்கிறதா? என்று சோதனை செய்யப்படும் முறையாகும். இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது எனவும், இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.