பலாத்கார வழக்கில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி வழக்கு இப்போது நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி. அந்த அணியின் டிஃபென்டராக இருக்கும் பெஞ்சமின் மெண்டி நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளார். இவர் மீது ஒரு பலாத்காரம் மற்றும் ஒரு பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இப்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது.
இதற்கிடையே 10 ஆயிரம் பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாக அவரே கூறியதாக வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. பெஞ்சமினின் மான்செஸ்டர் சிட்டி அணி உடனான ஒப்பந்தம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இந்த சர்ச்சை காரணமாக அணி நிர்வாகம் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை. அவர் மீதான பாலியல் புகார் சம்பவம் கடந்த 2020இல் பிரிட்டன் செஷயரில் உள்ள மோட்ராம் செயின்ட் ஆண்ட்ரூவில் உள்ள அவரது மாளிகையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது 24 வயதே ஆன பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அப்போது அவரை தாக்கி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த இளம்பெண் அஞ்சிய நிலையில், அந்த பெண்ணிடம் பெஞ்சமின், “இதில் ஒன்னும் இல்லை.. நான் 10,000 பெண்களுடன் உடலுறவு கொண்டேன். இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். 2018இல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அவர் மீது பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி என்று 2 குற்றச்சாட்டுகள் உள்ளது.
இருப்பினும், இந்த இரு குற்றச்சாட்டுகளையும் பெஞ்சமின் மறுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில், அப்போது இவர் மீதான குற்றச்சாட்டில் ஜூரிக்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இதனால், இப்போது மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தான் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வழக்கறிஞர், இந்தச் சம்பவம் நடந்த போது பெஞ்சமின் இதுபோல சொல்லி மிரட்டியுள்ளார். இந்தத் தகவலை அந்த பெண்ணின் நீதிபதி நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யார் இந்த பெஞ்சமின் மெண்டி..?
கடந்த 2017ஆம் ஆண்டில் பிரெஞ்சு கிளப்பான மொனாக்கோவில் இருந்து மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்தார். அவர் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 75 முறை விளையாடியுள்ளார். காயங்கள் மற்றும் ஃபார்ம் இல்லாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் அவர் சில போட்டிகள் மட்டுமே விளையாடினார். இப்போது அவரை மான்செஸ்டர் சிட்டி அணி புதுப்பிக்காத நிலையில், அவர் எந்த அணியிலும் இல்லை.
அவர் கடைசியாக 2021இல் தனது கடைசி போட்டியை விளையாடினார். அந்த போட்டி முடிந்த சில நாட்களிலேயே அவருக்கு எதிராக 4 பாலியல் புகார்கள் கிளம்பின. இது அங்கே நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், அவர் கடந்த 2018 முதல் 2019 காலகட்டத்தில் அவர் பிரான்ஸ் அணிக்காக விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.