இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ABVP நிர்வாகி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் தீர்த்தஹல்லி பகுதியில் ABVP அமைப்பின் நிர்வாகியாக இருப்பவர் பிரதீக் கவுடா. இவர், அப்பகுதியில் உள்ள சில கல்லூரி மாணவிகள், இளம் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து வைத்துள்ளார். பின்னர், இந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சிவமோக்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைராலாக பரவியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், NSUI மாணவர் அமைப்பு பிரதீக் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இளம்பெண்கள், மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வைத்து பிரதீக், மாணவிகளை பிளாக்மெயில் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், சிவமோக்கா போலீசார் பிரதீக்கை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இத்தகைய வீடியோக்கள், புகைப்படங்களை பகிரும் நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் குழுக்களின் அட்மின்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.