காதல் விவகாரத்தில் நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? என கொலை செய்த இளைஞர் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஹரிஹர கிருஷ்ணா (21) மற்றும் நவீன் (22) ஆகிய இருவரும் 12ஆம் வகுப்பு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்த நிலையில், அந்த பெண் நவீனின் காதலை முதலில் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், 2 ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டனர். அப்போது ஹரி ஹர கிருஷ்ணா அந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தவே, அந்த பெண்ணும் அவரின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் காதல் முறிவு ஏற்பட்ட பிறகும், அந்த மாணவிக்கு நவீன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து காதலன் ஹரி ஹர கிருஷ்ணா-விடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹரி ஹர கிருஷ்ணா தனது நண்பனை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர், காவல்நிலையத்தில் அவரே சரணடைந்துள்ளார். போலீஸ் விசாரணையில், கொலை சம்பவம் குறித்து ஹரிஹர கிருஷ்ணா பல அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நவீனை ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் வெறிச்சோடி இருந்த ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கு ‘நான் அந்தப் பெண்ணை காதலிக்கிறேன். உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டு விட்டது மீண்டும் ஏன் அவளை தொந்தரவு செய்கிறாய்?’ எனக் கேட்டேன். அப்போது நவீன் என்னை அடிக்க தொடங்கினான், உடனடியாக அவனை கொலை செய்யும் நோக்கத்தில் நானும் அவனை அடிக்க தொடங்கினேன்.
இறுதியில் நவீனை கொலை செய்வதற்காக மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவனது தலையை வெட்டினேன். பிறகு மார்பின் குறுக்கே வெட்டி இதயத்தை வெளியே எடுத்தேன். அவனது உடலை வெட்டினேன். விரல்களை துண்டித்தேன். அதற்குப் பிறகு நவீனின் உடலை யாரும் பார்க்காதவாறு மரங்களுக்குள் இழுத்துச் சென்று விட்டேன். பிறகு உடல் உறுப்புகளை அகற்றி விட்டு அங்கிருந்து விஜயவாடா, கம்மம், விசாகப்பட்டினம் எனப் பல இடங்களுக்குச் சென்று விட்டு, இறுதியில் 23ஆம் தேதியன்று தனது அப்பாவிடம் நடந்த சம்பவத்தை கூறினேன். அவர் உடனடியாக என்னை போலீசில் சரணடைய சொன்னார் என்று ஹரிஹர கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், தான் காதலித்த பெண்ணுடன் தகாத உறவில் நவீன் ஈடுபட்டதாலும் கொலை செய்ய தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் நவீன் கொல்லப்பட்டதை அவரது காதலி மற்றும் மற்றொரு நண்பர் ஹசன் ஆகிய இருவரிடம் வெளிப்படுத்தினேன். ஆனால் இருவரும் மிகவும் பயந்து விட்டனர். என்னை உடனடியாக போலீசில் சரணடைய சொன்னார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஹரிஹர கிருஷ்ணா மீது ஐபிசி பிரிவு 302, 201 மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(2) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அப்துல்லாபூர்மேட் காவல் ஆய்வாளர் வி.சுவாமி தெரிவித்துள்ளார்.