பல பாரம்பரிய, கலாச்சார, இயற்கை சுற்றுலாத் தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டால் கட்டப்பட்ட இந்தியாவின் தாஜ்மஹால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் விட விசேஷமானது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
32 மில்லியன் ரூபாய் செலவில், 1632-1653 ஆண்டு கால கட்டத்தில், நுட்பமான வேலைகளை கொண்டு கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. பல சிறப்புகள் அடங்கிய தாஜ்மஹால் 2007 ஆம் ஆண்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் தாஜ்மஹாலைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த தாஜ்மஹாலை சுற்றி பல கட்டுகதைகள் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று தான் இந்த கருப்பு தாஜ்மஹால்! முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மஹாலின் பிரதியை யமுனை ஆற்றின் எதிர்புறத்தில் கருப்பு பளிங்கில் கட்ட திட்டமிட்டார் என்ற தகவல் சுற்றுலா பயணிகள் மத்தியில் உலா வருகிறது. அது உண்மையா? வேறு என்னென்ன கட்டுக்கதைகள் தாஜ்மஹாலை சுற்றி வருகிறது, அதன் உண்மை என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
ஆக்ராவில் தற்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலை போன்று கருப்பு தாஜ்மஹாலை கட்ட விரும்பினாராம் ஷாஜஹான். “கருப்பு பளிங்கு கற்களை கொண்டு தாஜ்மஹாலைப் போன்ற மற்றொரு பிரம்மாண்ட கட்டுமானத்தைக் கட்டவேண்டும் என்பது ஷாஜஹானின் விருப்பம்” என்று கூறுகிறது உத்தரபிரதேச மாநில அரசின் தாஜ்மஹால் வலைதளம். இந்த இரண்டாவது தாஜ்மஹால் பேரரசரின் கல்லறையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்ததாக கூறப்படுகிறது. அப்போ ஷாஜகான் தனது மனைவியுடன் அடக்கம் செய்யப்பட விரும்பவில்லையா? என்ற கேள்விகளும் எழுந்தன.
யமுனை நதியின் மறுபுறத்தில் மாஹ்தாப் பாக் பகுதியில் கருப்பு தாஜ்மஹால் கட்ட திட்டமிடப்பட்டது. ஷாஜகான் இந்தக் கல்லறையைக் கட்டத் தொடங்கினார், ஆனால் ஆக்ரா கோட்டையில் அவரது மகன் ஔரங்கசீப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அதை முழுமையடையாமல் விட்டுவிட்டார் என்று கதைகள் கூறுகின்றன. ஆக்ரா கோட்டையில் உள்ள ஜன்னலில் இருந்து தாஜ்மஹாலைப் பார்த்துக் கொண்டே, சில ஆண்டுகளை அவர் கழித்ததாகக் கூறப்படுகிறது. 1665ஆம் ஆண்டு ஆக்ரா வருகை தந்த ஐரோப்பிய எழுத்தாளர் ஜென் பாப்டிஸ்ட்டின் (Jen-Baptiz)பயணக்கட்டுரையான Les Six Voyages De Jean Baptiste Tavernier இல் உள்ளது.
1640 மற்றும் 1655 ஆம் ஆண்டுகளில் முகலாய தலைநகர் ஆக்ராவிற்கு விஜயம் செய்த ஜென், ஷாஜஹான் ஆற்றின் எதிர்புறத்தில் தனது சொந்த கல்லறையை கட்டத் தொடங்கினார், ஆனால் அவரது மகன்களுடன் நடந்த போர்கள் காரணமாக நிறுத்தப்பட்டதாக எழுதினார். ஷாஜஹான் இரண்டு கல்லறைகளையும் யமுனை ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்துடன் இணைக்க விரும்பினார் என்றும் உள்ளூர் புராணங்கள் கூறுகின்றன. ஆனால் இது கற்பனைக் கதை என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக இருக்கிறது. கருப்பு தாஜ்மஹால் கதையில் எந்த உண்மையும் இல்லை. இது ஒரு கற்பனை என்கின்றனர். ஏனெனில் ஜென் தவிர, மற்ற சமகால பதிவுகளில் அது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
இப்பகுதியில் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியிலும் அத்தகைய கட்டிடம் கட்டப்பட்டதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. மஹ்தாப் பாக்கில் கருப்பு பளிங்கு இடிபாடுகள் காணப்பட்டாலும், அவை பல ஆண்டுகளாக நிறமாற்றம் அடைந்த வெள்ளைக் கற்கள் என்று முடிவுக்கு வந்தனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் தாஜ்மஹால் பற்றி நிறைய கதைகள் உலாவுகின்றன. இத்தகைய கதைகள் சுற்றுலா வழிகாட்டிகளால் புனையப்பட்டு, பரப்பப்படுகின்றன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.