தனியார் தொலைக்காட்சி நிறுவனமான புதிய தலைமுறை செய்தி நிறுவனம், இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள், ஆசிரியர் விருதுகள் என்று ஆண்டுதோறும் மூன்று விதமான விருது வழங்கும் விழாக்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில், சமூகம் தளைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு ஆண்டு தோறும் ”சக்தி விருதுகள்” என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாலை 6 மணியளவில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும், இந்த ”சக்தி விருதுகள் 2025” நிகழ்ச்சி, மார்ச் 8ஆம் தேதியான உலக மகளிர் தினத்தன்று புதிய தலைமுறை தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.