நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் கெட்டுப்போன ஷவர்மாவை விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் நகரில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பல இடங்களில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தி கெட்டுப்போன தரமில்லாத உணவுப்பொருட்களை அதிகாரிகள் குப்பையில் கொட்டினர். அப்படியிருந்தும் தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி கெட்டுப்போன உணவுப்பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைத்தாலும் அதையும் மீறி உயிருக்கு ஆபத்தான வகையில் உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோல் ஷவர்மா கடைகளுக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சாலையோரம் வைத்து ஷவர்மா விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். மேலும், உணவு கெட்டுப்போயிருந்தால் நீங்களே குப்பையில் கொட்டி விடுங்கள் என அனைத்து உணவகங்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அதையும் மீறி வைத்திருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.