கணவர், 3 குழந்தைகளை விட்டுவிட்டு 12ஆம் வகுப்பு மாணவனுடன் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவரின் செயல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் வட்டத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண் ஷிவானி. இவருக்கு பெற்றோர் இல்லாத நிலையில், ஏற்கனவே இரண்டு திருமணம் செய்திருக்கிறார். ஷிவானிக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். முதலில் மீரட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த 2011ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளியான தவுபிக் என்பவரை ஷிவானி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான், அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவனுடன் ஷிவானிக்கு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, கடந்த வாரம் கணவர் தவுபீக்கிடம் இருந்து ஷிவானி விவாகரத்து பெற்றுக் கொண்டார். பின்னர், முஸ்லீம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி ஷப்னம் என்ற பெயரை ஷிவானி என்று மாற்றிக் கொண்டார்.
இவர், அங்குள்ள கோயிலில் 12ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பற்றி கேட்ட போது, நாங்கள் இருவரும் விருப்பத்துடன் தான் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் யாரும் தலையிட உரிமையில்லை. இருவருமே மேஜர்கள். ஒன்றாக வாழவும், ஒன்றாக இறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஷப்னம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பின் சமூகத்தோர் ஆலோசனைக்குப் பின் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. இந்த பஞ்சாயத்தின் முடிவில், “ஷப்னம் விரும்பும் இடத்தில் வாழட்டும்” என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.