ஆதரவற்ற மற்றும் அனாதை குழந்தைகளுக்கு தங்குமிடம், கல்வி மற்றும் ரூ.4,000 நிதியுதவி வழங்குவதற்கான மசோதாவை ஹிமாச்சலப் பிரதேச அரசு நிறைவேற்றியது.
ஆதரவற்ற மற்றும் அனாதை குழந்தைககளைக் கவனிப்பதை நோக்கமாகக் கொண்டு சுகாஷ்ரயா (மாநிலத்தின் குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை) மசோதா 2023 என்ற மசோதவை ஹிமாச்சலப் பிரதேச அரசு உருவாக்கியது. இந்த மசோதா ஆதரவற்ற மற்றும் அனாதை குழந்தைகளை “மாநிலத்தின் குழந்தைகள்” என்று வரையறுத்துள்ளது. இந்த மசோதா இன்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.. இந்த மசோதா குழந்தைகளின் கல்வி, திறன் பயிற்சி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு வழங்க வழிவகை செய்கிறது. தங்குமிடம் மற்றும் பராமரிப்பைத் தவிர, அனாதை குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 4,000 உதவித்தொகை வழங்கப்படும், இதனால் 6,000 குழந்தைகள் பயனடைவார்கள்.
மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, நாட்டிலேயே இதுபோன்ற சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் ஹிமாச்சலப் பிரதேசம் என்றும், மசோதாவை செயல்படுத்த முழு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.101 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் 27 வயது வரை உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் உயர்கல்விக்கான செலவையும் அரசாங்கம் ஏற்கும், மாதத்திற்கு ரூ. 4,000 உதவித்தொகையை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், 27 வயதை அடைந்த பிறகு, அவர்களுக்கு நிலமும், வீடு கட்டுவதற்கான பணமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்..
எவ்வாறாயினும், காங்கிரஸ் தலைமையிலான ஹிமாச்சல அரசு கொண்டு வந்த இந்த மசோதாவின் பெரும்பாலான விதிகள் ஏற்கனவே மத்திய அரசின் திட்டங்களில் உள்ளன என்று பாஜக விமர்சித்துள்ளது..