தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்ற முக.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழத்தொடங்கியது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுபவத்திற்கு தகுந்த பதவி கிடைக்காமல் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த இறையன்புவே மு.க.ஸ்டாலின் முதல் தேர்வாக இருந்தது. இறையன்பு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது அனைவர் மத்தியிலும் வரவேற்கத்தக்க நிகழ்வாக அமைந்தது.
தமிழ்நாடு அரசு எனும் இயந்திரத்தின் அச்சாணியாக இருந்து அரசுப்பணியாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது, மக்கள் நலத்திட்டங்களை கண்காணிப்பது, மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வது என பதவிக்கான பணிகளை தாண்டி கூடுதலான பணிகளையும் சிறப்பாக செய்துவந்தார். கடந்த இரு அண்டுகளாக தலைமைச் செயலாளாராக பணியாற்றிய இறையன்புவிற்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால், இந்த மாதம் அதாவது ஜூன் 30 தேதியான நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.
அடுத்த தலைமைச் செயலாளர் போட்டியில் சிவ்தாஸ் மீனா, ஹன்ஸ்ராஜ் வர்மா, விக்ரம் கபூர், அதுல்யா மிஸ்ரா, கிருஷ்ணன், எஸ்.கே.பிரபாகர் என பலர் இருந்தாலும் சிவ்தாஸ் மீனா மற்றும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிக வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து இருந்ததை அடுத்து, புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் 49-வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ஆம் தேதி பொறுப்பார். நாளையுடன் இறையன்பு ஐஏஸ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவதால் புதிய தலைமை செயலாளராகி உள்ளார் சிவ்ராஸ் மீனா.