UNICEF: உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என 37 கோடி பேர் பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர் என்று யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, யுனிசெப் அமைப்பானது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என 37 கோடி பேர், அதாவது 8 ல் ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் 65 கோடி பெண்கள் ( 5ல் ஒருவர்) இணைய வழி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 7.9 கோடி பேர் சஹாரா ஆப்ரிக்காவிலும், 7.5 கோடி பேர் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலும் 7.3 கோடி பேர் மத்திய மற்றும் தெற்காசியாவிலும், 6.8 கோடி பேர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும் 4.5 கோடி பேர் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனை சேர்ந்தவர்கள் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், உள்நாட்டு கலவரம் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலை கொண்ட நாடுகளில் வசிக்கும் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாகவும் அங்கு 4 ல் ஒருவர் பாலியல் வன்முறைக்கு அதிகம் உள்ளாகி இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுமிகளில் பெரும்பாலானோர் வயது 14 முதல் 17 வரை தான் இருக்கிறது. இந்த சித்ரவதையால் பாதிக்கப்படும் சிறுமிகள் மீண்டும் அதே போன்றதொரு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடுமையை எதிர்கொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் கூறுகிறது.