கொரோனா 3ம் அலையின் போது பரவிய ஒமைக்ரான் பி1.1 வைரஸ் இதுவரை 5009 முறை உருமாறியுள்ளதாக ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலஜி நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓராண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை, கொரோனா மூன்றாம் அலையின் போது பரவிய, ஒமைக்ரான் பி 1.1 மற்றும் அதன் உருமாற்றங்கள் குறித்த மரபணு ஆய்வுகளை மேற்கொண்டது. 2021 டிசம்பர் முதல் 2023 மார்ச் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரை, ‘ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலஜி’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வில் மொத்தம் 11,526 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 10,663 மாதிரிகள் ஒமைக்ரான் வகையை சார்ந்தவை. உருமாற்றமடைய சாத்தியம் இருந்த, 1,688 மாதிரிகள் மரபணு சோதனைக்கும், 150 மாதிரிகள் ஆழ்ந்த சோதனைக்கும் உட்படுத்தப்பட்டன.
ஒமைக்ரானின் உட்பிரிவான பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2.75 வகைகள், மக்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்தன. அதேபோல், பி.ஏ.1 – பி.ஏ.2 வகை பாதிப்புகள், உயிரிழப்புக்கு வழிவகுத்தன. அதை தொடர்ந்து, கொரோனா வைரஸின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட உருமாற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆழ்ந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட, 150 சளி மாதிரிகளில், 5,009 உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.