உத்தரப்பிரதேச மாநிலம் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில், மிர்சாபூர் – பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த பக்தர்கள் சத்தீஸ்கர் மாநிலம் கோப்ராவைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து பிரயாக்ராஜ் கூடுதல் போலீஸ் எஸ்.பி. விவேக் சந்த்ர யாதவ் கூறுகையில், ”சத்தீஸ்கரில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு கும்பமேளாவுக்கு வந்த கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்வரூப் ராணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்றார்.
இந்த விபத்து நிகழ்ந்த தகவல் தெரிந்ததுமே, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டார்.