Gold: 2025 தீபாவளிக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,03,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகையின் போது தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 60,282 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் 10 கிராமுக்கு 78,577 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று இந்திய புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேசன் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 2023-ஆம் ஆண்டின் தீபாவளிக்குப் பிறகு 30 சதவீதம் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் உள்நாட்டில் தங்கத்தின் விலை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த சாதனை உச்சத்தை எட்டிய போதிலும் இந்த பண்டிகைக் காலத்தில் தங்கத்தின் தேவை அதிகமாக உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன்னரே 10 கிராமின் விலை 80,000-த்தை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு தங்கம் தொடர்ந்து நம்பகமான முதலீடாக இருந்து வருகிறது. தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக ஒரு மதிப்புமிக்க முதலீடாகப் பார்க்கப்படுகிறது. “தற்போதைய உலகளாவிய சூழலைப் பொறுத்தவரை, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது ஒரு நல்ல நேரம்” என்று ஜெர்மினேட் இன்வெஸ்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தோஷ் ஜோசப் கூறியுள்ளார்.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்றும் அதற்கு உதாரணமாக கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்திருந்தது. இதனால் ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கத்தின் விலை 7,360 ரூபாயை எட்டியது. அதேபோல 24 கேரட் தங்கத்தின் விலை 8,029 ரூபாயை எட்டியது. தங்கம் நீண்ட கால முதலீட்டிற்கான சிறந்த தேர்வாக உள்ளது. ஏனெனில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டையும் தங்கம் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் தங்கத்தின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போதும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அடுத்த தீபாவளி பண்டிகைக்குள் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பரில் இருந்து ஏறக்குறைய 30 சதவீதம் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டின் தீபாவளிக்குள் தங்கம் விலை 10 கிராமுக்கு 1,03,000 ரூபாயாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Readmore: ஹெஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்!. முக்கிய தளபதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்!. பயத்தில் ஈரான்!.